போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற குடல்சார் மருத்துவக் கருத்தரங்கில், அமெரிக்க ஜீரண மண்டல நிபுணரான டாக்டர் பால் (பழனியப்பன் மாணிக்கம்) முக்கிய உரை நிகழ்த்தினார்.
இதில், 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவ ர்கள் பங்கேற்றனர். குடல் சுகாதாரம் பாதிக்கப்படுவதால், நச்சுப்பொருட்கள், பாக்டீரியாக்கள் மற்றும் செரிமானம் ஆகாத உணவுத் துகள்கள் ரத்தத்தில் கலந்துவிட வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் மலச்சிக்கல், வயிற்று வலி, செரிமான கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
குடலின் செயல் முறையை “இரண்டாவது மூளை” என விளக்கிய டாக்டர் பால், மனநிலை மற்றும் ஒருவரின் தெளிவான சிந்தனைகளுக்குப் பின்னால் குடல் நலனே முக்கிய காரணமாக இருப்பதாக கூறினார்.
இதற்காக தினமும் குறைந்தது 25 கிராம் நார்ச்சத்து கொண்ட உணவை உட்கொள்ள வேண்டும் எனவும், நம் வாழ்க்கை முறையையும் உணவுப் பழக்கங்களையும் சீர்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குடல் நலனை பராமரிப்பதன் மூலம் உடல்நலத்தோடு மன நலத்தையும் மேம்படுத்த முடியுமென அவர் அழுத்தமாக தெரிவித்தார்.
