அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில், 1994-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட கருவில் இருந்து, ஜூலை 2025-ல் “தாடியஸ் டேனியல் பியர்ஸ்” என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளார்.
இதனால், உலகில் உறைந்த கருவில் இருந்து பிறந்த மிக வயதான குழந்தை என்ற பெருமையை பெற்றுள்ளார். இது மருத்துவ உலகில் ஒரு பெரிய சாதனையாகவும், IVF மற்றும் கரு உறைபனி தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை காட்டும் முக்கிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வின் பின்னணி, 1994-ல் லிண்டா ஆர்ச்சர்ட் என்ற பெண் IVF முறையில் கருவை உருவாக்கிக் குழந்தையை பெற்றெடுத்த பிறகு, மீதமிருந்த கருக்களை உறைபனி நிலையிலிருந்து பாதுகாத்து வைத்தார். 2023-ல், அந்த கருக்களை அவர் கரு தத்தெடுப்புக்காக தானமாக வழங்கினார்.
“ஸ்னோஃப்ளேக்ஸ்” எனப்படும் கரு தத்தெடுப்பு திட்டத்தின் மூலம், ஓஹியோவைச் சேர்ந்த லிண்ட்சே மற்றும் டிம் பியர்ஸ் தம்பதியரால் அந்த கரு தத்தெடுக்கப்பட்டது. அதிலிருந்து வளர்ச்சியடைந்து பிறந்ததுதான் தாடியஸ்.
இந்த கரு, 30 ஆண்டுகள் உறைந்த நிலையில் இருந்தாலும், மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது — சரியான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டால், அவை தரக்குறைவில்லாமல் பயன்படுத்தலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம். கரு தத்தெடுப்பு என்பது இயற்கையாக கருத்தரிக்க முடியாத தம்பதிகளுக்கு ஒரு மாற்றுப் பாதையாக விளங்குகிறது. இதன் மூலம் தாயே குழந்தையை சுமந்து பெற்றெடுக்க முடியும் என்பது இதன் முக்கிய தன்மை.
தாடியஸின் பிறப்பு, இனப்பெருக்க மருத்துவ வளர்ச்சியின் புதிய நிலைமையை உலகிற்கு காட்டியுள்ளது. IVF சிகிச்சை எடுக்கும் தம்பதிகளுக்கு இது நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு சிறந்த நிகழ்வாகும். உலகம் முழுவதும் தற்போது கோடிக்கணக்கான உறைந்த கருக்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில் உள்ளன.
அவற்றின் எதிர்கால பயன்பாடு, ஒழுங்குமுறை நடைமுறைகள், நெறிமுறை கேள்விகள் போன்றவை இந்த சாதனையால் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதேசமயம், குழந்தையின்மையால் வேதனையடையும் தம்பதிகளுக்கு இது ஒரு புதிய நம்பிக்கையைத் தரும் செய்தியாகவும் அமைந்துள்ளது.
