உத்திரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில் முகமது முஜீப் சைபி (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக பொறியியல் நுழைவு தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் ராஜஸ்தான், கோட்டா நகரில் உள்ள விடுதியில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் தனது 4 நண்பர்களுடன் சேர்ந்து பிம்லாபாத் நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி 4 நண்பர்களும் முகமதுவும் சேர்ந்து 2 இரு சக்கர வாகனங்களில் கோட்டா நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் வரை அவர்கள் சென்ற நிலையில் கூகுள் மேப்பை பயன்படுத்தி பூண்டியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அங்கு காலை 5 மணிக்கு சென்ற அவர்கள் மகிழ்ச்சியாக 2 மணி நேரம் குளித்து கொண்டிருந்தனர். அதன் பின் காலை 7:30 மணியளவில் முகமது நீர்வீழ்ச்சியிலிருந்து வெளியே சென்றபோது அவரது சட்டை நீரில் அடித்து செல்லப்பட்டது. அதனை பிடிப்பதற்காக அவர் முயன்ற நிலையில் நீரோட்டம் கடுமையாக இருந்ததால் முகமது வெளியே வர முடியாமல் தவித்தார்.

இதை தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடிய நீர் அவரை அடித்துச் சென்ற நிலையில் கரையேற முடியாமல் செய்தி திணறினார். அதனை கண்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் உடனடியாக மாநில பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முகமதுவை தேடிய நிலையில் அவர் கிடைக்கவில்லை.

கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தண்ணீரின் ஆழத்தில் இருந்த பாறைகளில் சிக்கியிருந்தது தெரியவந்தது. அதன் பின்னரே அவரது உடல் மீட்கப்பட்டது. மேலும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக குளித்து விளையாடிக் கொண்டிருந்த ஜேஇஇ மாணவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சட்டையை எடுப்பதற்காக சென்றபோது நேர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.