கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அருகே நவதி பகுதியில் மதன் என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு 14 வயதாகும் நிலையில் அருகிலுள்ள தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடைய நெருங்கிய நண்பர்கள் ஆரியன்சிங் மற்றும் ஹரீஷ். இதில் ஆரியன் சிங் என்பவர் அதே பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஹரிஷ் அந்திவாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ நாளில் மதன் பள்ளிக்கு செல்லவில்லை. அவனுடைய நண்பர்கள் ஆரியன் சிங், ஹரிஸ் இருவரும் பள்ளிக்கு சென்றிருந்தனர். மாலை நேரத்தில் தனது நண்பர்களை இரு சக்கர வாகனத்தில் அழைத்து வருவதற்காக மதன் தனது தந்தையின் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றான். அங்கு அவர்களை ஏற்றி கொண்டு வீட்டிற்கு திரும்பிய போது மத்திகிரி கூட்டு பகுதிக்கு அருகே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் எதிர்பாராத விதத்தில் மோதியதால் 3 சிறுவர்களும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே ஆரியன் சிங் உயிரிழந்தான். இதைத்தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் செல்லும் வழியில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் 3 மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.