இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்த சாய்னா நேவால் (வயது 35), உலக தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றதோடு, ஒலிம்பிக் வெண்கல பதக்கம், உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் உள்ளிட்ட பல சாதனைகள் மூலம் இந்தியாவை பெருமைப்படுத்தியவர். 2023-ம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரர் பருபுல்லி காஷ்யப் மற்றும் சாய்னா நேவால் ஆகியோர், 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, ஐதராபாத்தில் வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிகள் நீண்ட நாள் காதலுக்குப் பிறகு திருமணம் செய்ததாகவும், சமூக வலைதளங்களில் அடிக்கடி ஒன்றாக வெளியிடும் புகைப்படங்கள் வழியாக மிக நெருங்கிய உறவாகவே தெரிந்தனர். ஆனால், தற்போது 7 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முறிவு வைத்துள்ளதாக சாய்னா இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பதிவில், “நாங்கள் இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம்” என சாய்னா குறிப்பிட்டுள்ளார். ஆனால், பிரிவதற்கான காரணம் குறித்து எந்தவிதமான விளக்கமும் அவர் தரவில்லை. இருவரும் சமரசமாகத் தங்களது வாழ்க்கையை ஒவ்வொருவரும் தனியாக தொடர முடிவு செய்துள்ளனர். இந்த அறிவிப்பால் சாய்னா நேவாலை விரும்பும் ரசிகர்கள் இடையே சோகத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.