தமிழகத்தில் மதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக வைகோ செயல்பட்டு வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் “ஜெயலலிதாவை போயஸ் கார்டன் சென்று நான் சந்தித்தேன். அதுதான் என் அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு” என்று கூறியிருந்தார். இதனை பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் வைகோ கூறியது தொடர்பாக பேசியிருந்தார்.

அவர் பேசியதாவது, “வைகோ அரசியலில் தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக அதிமுகவை தேடி வந்தார். அப்போது ஜெயலலிதாவை போயஸ் கார்டன் தோட்டத்திற்கு சென்று நேரில் சந்தித்தார். அதன் பின்னரே அவருக்கு பம்பரம் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கிடைத்தது. இந்த வெற்றி அதிமுகவால் அவருக்கு கிடைத்த வெற்றியாகும்.

அதனை அவர் மறந்து விடக்கூடாது. ஆனால் தற்போது வயதான காரணத்தினால் ஞாபகம் மறதி ஏற்பட்டு உளறிக் கொண்டிருக்கிறார். மேலும் அதிமுக செய்த உதவியை மறைந்து வைகோ இப்படி பேசுவதால் அவரை இனிமேல் பொய்கோ என்று தான் அழைக்க வேண்டும்” என்று கூறினார்.