
உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனின் ராஜ்பூர் பகுதியில் கவுசல்யா தேவி(75) என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை வழக்கம் போல் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது முகமது ஜாஹித் என்பவர் தான் வளர்க்கும் 2 ராட்வீலர் நாயை அழைத்துக் கொண்டு வாக்கிங் சென்றுள்ளார். அப்போது அந்த 2 நாய்களும் அவரது பிடியிலிருந்து தப்பியது.
அதுமட்டுமின்றி வாக்கிங் சென்று கொண்டிருந்த கௌசல்யா தேவியை விரட்டி விரட்டி கடித்துள்ளது. இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதில் கவுசல்யா தேவி படுகாயம் அடைந்தார். இறுதியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். நாய் கடித்ததில் அவரது தலை, கைகள், கால்கள், காது ஆகியவற்றில் ஆழமான காயங்களும், 2 எலும்புகளில் முறிவும் ஏற்பட்டுள்ளது.
இதனால் 200 தையல் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை இன்னும் சீராகவில்லை மோசமான நிலையில் தான் உள்ளார்.
இந்நிலையில் அவரது மகன் உமாங் நிர்வால் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நாய் உரிமையாளர் நஃபீஸ்(40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஆபத்தான நாய் இனங்களை வைத்திருப்பதற்கான உரிமையை அவர் பெறவில்லை என்பது தெரிய வந்தது.