பூமியின் ஆழமான மையப்பகுதியில் புதைந்து கிடந்ததாக நம்பப்பட்ட தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள், மெதுவாக பூமியின் மேற்பரப்பை நோக்கி நகர்ந்து கொண்டு வருவதாக விஞ்ஞானிகள் புதிய ஆய்வில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுவரை, பூமியில் உள்ள தங்கத்தின் 99.9% மையத்தில் உள்ளது என நம்பப்பட்ட நிலையில், இந்த புதிய தகவல் அறிவியல் உலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் நில்ஸ் மெஸ்லிங் தலைமையிலான குழுவினர், ஹவாயி தீவுகளில் உள்ள கிலாவேயா எரிமலையின் பாறை மாதிரிகளை ஆய்வு செய்து இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

அந்த பாறைகளில் ருத்தேனியம் எனப்படும் அரிய உலோகம் மிக அதிக அளவில் காணப்பட்டதால், அது பூமியின் மையம் மற்றும் மேன்டில் இடை எல்லையிலிருந்து வந்திருக்க வேண்டும் என அவர்கள் உறுதியாகக் கூறியுள்ளனர். வழக்கமாக மேன்டில் பகுதியில் உள்ள ருத்தேனியத்தை விட, இந்த மாதிரிகளில் உள்ள அளவு மிகவும் அதிகமாக இருந்தது. இதன் மூலம், மையத்திலிருந்து உலோகங்கள் மேற்பரப்புக்கு மெதுவாக மேலே வந்து கொண்டிருப்பது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு, பூமியின் உள் இயக்கங்கள் மிகச் சுறுசுறுப்பாக இருப்பதையும், புவி வேதியியல் சுழற்சியில் புதிய புரிதல்களை ஏற்படுத்தக்கூடியதாகவும் கருதப்படுகிறது. பூமியின் மூன்று அடுக்குகள் — மேலோடு (crust), மேன்டில் (mantle), மற்றும் மையம் (core) — இதன் செயல்பாடுகளின் கீழ் பல்வேறு மாற்றங்களை சந்திக்கின்றன.

இந்த ஆய்வு மே 21ஆம் தேதி Nature என்ற உலகத் தலைசிறந்த அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது, பூமியின் உள் செயல்முறைகள் பற்றிய மனிதனின் அறிவுக்கு புதிய பரிமாணத்தைத் திறக்கக்கூடிய முனைவு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.