மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் கார்த்திகேயன்-சுவாதி (21) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் 45 நாட்களில் அந்த குழந்தை இறந்துவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 11 நாட்களுக்கு முன்பாக மீண்டும் இரண்டாவதாக சுவாதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் சுவாதி தன் குழந்தைக்கு வழக்கம் போல் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் பயந்து போன சுவாதி தன் குழந்தையை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறிவிட்டார்.

இது தொடர்பாக சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.