உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள போஜ்பூர் நகரில், 25 வயதான இளைஞர் ஒருவர் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென விழுந்து உயிரிழந்தார். நேற்று இந்த சம்பவம் நடந்தது. கடந்த 2 மாதங்களில் இப்பகுதியில் நடந்த மூன்றாவது இளம் வயது திடீர் மரணமாக இது பதிவாகியுள்ளது.

மரணமடைந்தவர் ரெஹான் குரேஷி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் போஜ்பூர் பகுதியின் மொஹல்லா படி மண்டி பகுதியை சேர்ந்தவர். இரவு உணவுக்குப் பிறகு அவர் தனது SIM கார்டு கடைக்கு நடந்து சென்றபோது, சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு நாய் மீது திடீரென விழுந்துள்ளார்.

அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துசென்றபோதும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிறகு குடும்பத்தினர் மொராதாபாத் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், அவரது இறப்பு உறுதி செய்யப்பட்டது.

இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. மருத்துவ அதிகாரிகள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். “வெப்பஅழுத்தம் காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை, ஏனெனில் அவர் ஒரு குளிரூட்டப்பட்ட சுற்றுப்புறத்திலிருந்தே வெளியே வந்தார்.

ரெஹான், ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் செய்திருந்தார். அவரது மனைவி நஜ்மா, தந்தை குஃப்ரான், தாய் ருக்சானா மற்றும் மூன்று சகோதரர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர்.  இளம் வயதிலேயே ஏற்படும் இந்த திடீர் மரணங்கள் தொடர்பாக மாவட்டத்தில் ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன.