
செங்கல்பட்டு மாவட்டம் சித்தேரிக்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஞானசக்தி நாகாத்தம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மகா கும்பாபிஷேகம் மற்றும் பால்குடம் எடுக்கும் விழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் 108 கலசங்களுடன் மகா கும்ப கலசம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற நிலையில் திடீரென அந்த விழா நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர சுவாமிகள் தலைமையில் கடந்த 11 ஆம் தேதி காலை கும்ப கலசம் கொண்டுவரப்பட்டு நாகாத்தம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் கோவிலில் நடைபெற்ற பூஜையின் போது நல்ல பாம்பு பக்தர்கள் முன்பாக மேஜையில் வைக்கப்பட்டது. அந்தப் பாம்பு படம் எடுக்காமல் இருந்த நிலையில் பாம்பை பிடித்து வந்த நபர் அதை கையால் தட்டி படம் எடுக்க வைத்தார்.
அதன் பின் பூசாரி அதற்கு கற்பூரம், ஊதுபத்தி ஆகியவற்றால் தீபாரதனை காட்டிய நிலையில், பின்னர் சோமசுந்தர சுவாமிகள் அந்த பாம்பை எடுத்து கழுத்தில் மாலையாக போட்டு கொண்டு பக்தர்களுக்கு அருள் வழங்கினார். மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வன உயிரின ஆர்வலர்கள் பாம்பை வைத்து பூஜை செய்தவர்கள் மற்றும் அதனை கழுத்தில் மாலையாக அணிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு பெண் சாமியார் ஒருவர் இதேபோன்று பாம்பை கழுத்தில் போட்டுக் கொண்டு அருள்வாக்கு கூறியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.