இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இயல்புக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லா பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, “பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் ஜம்மு காஷ்மீர் மோசமான நிலைமைக்கு சென்றது.

குறிப்பாக தாக்குதலின் போது பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள 13 பேர் உயிரிழந்தனர். அந்தக் கவலையான சூழ்நிலையிலும் பூஞ்ச் மாவட்டத்தின் மக்கள் சகோதரத்துவத்துடன் இந்தியாவிற்கு ஆதரவாக ஒத்துழைப்பு கொடுத்தனர். இதற்காக அந்த மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலின் போது வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது தங்கள் வீடுகளுக்கு திரும்பி வரலாம்” என்று கூறினார். “இரு நாடுகளுக்கு இடையேயான தாக்குதல் கிட்டத்தட்ட போர் போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்தியா மத வழிபாட்டு தலங்களை தாக்கியதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியது என்பது உலகிற்கே தெரியும் என்று கூறினார்.