
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்தது. அதன் பின் இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலானது முடிவுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களின் சந்திப்பின்போது ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான விவரங்களை கூறினார். அதில் கடந்த சனிக்கிழமை, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிவித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசியது இணையத்தில் வைரலான நிலையில் விக்ரம் மிஸ்ரி மற்றும் லண்டனில் வேலை பார்த்து வரும் அவரது மகள் பற்றி பல விமர்சனங்கள் வெளியாகின. இதனால் அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தை தனிப்பட்ட கணக்காக மாற்றினார். இதனை அறிந்த அரசியல் தலைவர்கள் சிலர் விக்ரம் மிஸ்ரியின் மீதான விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி எம்பி சசி தரூர் இது குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, “நம் நாட்டிற்காக விக்ரம் மிஸ்ரி மிகச்சிறந்த பணியை செய்துள்ளார். 2 பெண் அதிகாரிகளுடன் அவர் கடினமாக உழைத்துள்ளார். பாகிஸ்தான் தொடர்பாக தாக்குதல் குறித்து அமைதியாகவும், தொழில் நேர்மையுடனும் ஊடகங்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். அவரை ஏன் நாம் விமர்சனம் செய்ய வேண்டும்…? அவர் மீதான விமர்சனங்கள் தவறானவை” என்று கூறியுள்ளார்.