திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் இன்று காலை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வந்தனர். அப்போது அங்கு மணக் கோலத்தில் வந்த இளம் ஜோடி மாலை மாற்றிக் கொண்டனர். அதன் பின் இளைஞர், இளம்பெண்ணின் கழுத்தில் தாலியை கட்ட சென்றுள்ளார்.

அப்போது சினிமா பாணியில் பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை குடும்பத்தினர் அங்கு வந்தனர். பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியபடி எங்களது மகளை கடத்தி வந்து கட்டாய திருமணம் செய்ய பார்க்கிறார் என்று கூறினர்.

மேலும் இளம்பெண்ணை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது இளைஞரின் உறவினர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒருபுறம் இருவீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென இளம் பெண் கழுத்தில் இளைஞர் தாலியை கட்டி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பொதட்டூட்பேட்டையைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் உமாபதி(21), பொம்மராஜுபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஹேமாச்சலம் என்பவரின் மகள் ரீட்டா(19) ஆகிய இருவரும் ஆர்.கே பேட்டை பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்ததும், அவர்கள் காதலித்து வந்ததும் தெரிய வந்தது.

இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்பாதிக்காததால் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். இருவரும் மேஜர் என்பதால் காவல்துறையினர் மணமக்களை அனுப்பி வைத்தனர்.