
தமிழகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்கிறது. அந்த வகையில் நேற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
அதன் பிறகு கோவை மாவட்டம் மலைப்பகுதிகள், தென்காசி, திண்டுக்கல், தேனி மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானமேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 11-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.