டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) மே மாதத்தில் இருந்து புதிய தொழில்நுட்ப அடிப்படையிலான முழு உடல் ஸ்கானர்களின் சோதனைகள் தொடங்கப்பட உள்ளதாக டெல்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (DIAL) அறிவித்துள்ளது. நான்கு மேம்பட்ட ஸ்கானர்கள் பெறப்பட்டுள்ளன, இதில் இரண்டு டெர்மினல் 1ல், மற்ற இரண்டு டெர்மினல் 3ல் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஸ்கே னர்கள் 70-80 GHz அளவில் செயல்படும் மில்லிமீட்டர்-வேவ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கதிர்வீச்சு இல்லாமல் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன. இதில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்துவோருக்கும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது.
இவை உலோகமும் அல்லாத பொருட்களையும் கண்டறிந்து வெடிகுண்டுகள் போன்ற அச்சுறுத்தல்களையும் மேலோட்டமாக கண்டறியலாம். மேலும், பயணிகளின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், ஸ்கேனில் பெறப்படும் படம் ஒரு பிம்ப அவதாரமாக காணப்படுவதால், எந்தவொரு நிஜ உருவங்களும் சேமிக்கப்படுவதில்லை. ஒரு ஸ்கேன் மூன்று விநாடிகளில் முடிவடையும் வகையில், மணிக்கு 1,200 பேர் வரை ஸ்கேன் செய்யக்கூடிய திறனும் கொண்டது. இந்த ஸ்கேனர்கள் பயன்படுத்தப்படுவதன் மூலம் விமான நிலையங்களில் விரைவான மற்றும் பயணிகளுக்கு வசதியான சோதனை நடைமுறையாகும் என DIAL தெரிவித்துள்ளது.
