ஈரோடு மாவட்டத்தில் உள்ள கெட்டிசெவியூர் பகுதியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக முருகன் என்பவர் இருக்கிறார். இந்நிலையில் இந்த பள்ளியில் வேதியியல் ஆசிரியராக சந்திரசேகரன் என்பவர் பணிபுரிகிறார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் தலைமை ஆசிரியர் முருகனிடம் புகார் கொடுத்தனர். அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் சந்திரசேகரன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதால் முருகன் காவல் நிலையத்தில் இது பற்றி புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்திரசேகரனை கைது செய்ய முயன்ற போது தலைமறை வாகிவிட்டார்.அவர் கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் அங்கு சென்று சந்திரசேகரனை தற்போது கைது செய்துள்ளனர். மேலும் சமீப காலமாக தமிழகத்தில் பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் என்பது அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
