உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா கடந்த மாதம் தொடங்கிய நிலையில் இந்த மாதம் 26ம் தேதி நிறைவடைகிறது. இந்த நிகழ்வில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியுள்ள நிலையில் பிரதமர் மோடி, ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் புனித நீராடியுள்ளனர். அந்த வகையில் தமிழக ஆளுநர் ரவி தற்போது மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளார். இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, உலகம் முழுவதும் மற்றும் இந்தியா முழுவதும் இருந்து வந்த எண்ணற்ற இந்துக்களுடன் சேர்ந்து மகா கும்பமேளாவில் புனித நீராடினேன். நம்முடைய சகோதர சகோதரிகளின் நல்வாழ்வுகாகவும் நம்முடைய தேசமான பாரதத்தின் செழிப்புக்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன். ஏற்கனவே சுமார் 60 கோடி சனாதனவாசிகள் புனித நீராடியுள்ளனர் என்று பதிவிட்டுள்ளார். இதே போன்று பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய x பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் மகா கும்பமேளா விரைவில் நிறைவடையும் நிலையில் பிரயாக்ராஜ் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
