ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் துளசி. இவரது கணவர் 10 வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதனால் தனது தாய் வீட்டில் தங்கியிருந்த துளசி தற்போது புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு ஆட்டோவில் பெட்டி ஒன்று டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
அந்த பெட்டியை திறந்து துளசிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அடையாளம் தெரியாத ஒருவரது சடலம் அதற்குள் இருந்துள்ளது. அதனுடன் ஒரு கடிதம் இருந்துள்ளது. அந்த கடிதத்தில் துளசியின் கணவர் 10 வருடங்களுக்கு முன்பு தன்னிடம் வாங்கிய மூன்று லட்சம் ரூபாய் கடன் பணத்தை வட்டியும் முதலுமாக 1.35 கோடி ரூபாயாக கொடுக்க வேண்டும்.
மோசமான விளைவுகள் நடக்க வேண்டாம் என்று நினைத்தால் இந்த பணத்தை கொடுத்தாக வேண்டும் என்று மிரட்டி எழுதப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து துளசி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பெட்டியில் இருந்து சடலம் யார் என்பதை கண்டறிய கடந்த மூன்று நாட்களில் காணாமல் போனவர்கள் பற்றிய புகார்களை அலசி ஆராய்ந்து வருகின்றனர். இதனிடையே துளசியின் பெற்றோரின் இளைய மருமகன் நேற்றிலிருந்து காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.
