பிரபல சமூக ஊடக நிறுவனமான மெட்டா உலகளவில் சுமார் 8,000 ஊழியர்களை ஒரே நாளில் அதிரடியாகப் பணிநீக்கம் செய்து ஐடி துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் நடுத்தர அளவிலான மேலாளர்கள் ஆகியோரே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் செலவினங்களைக் குறைக்கவும், செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்கள் காலை 4 மணிக்கெல்லாம் தங்களின் பணிநீக்க மின்னஞ்சல்களைப் பெற்று அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக, ‘மேலாளர்களை நிர்வகிக்கும் மேலாளர்கள்’ என்ற கலாச்சாரத்தை ஒழித்து, நிறுவனத்தை மிகவும் சுறுசுறுப்பாகவும் சிறியதாகவும் மாற்ற மெட்டா தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளார்.

இந்தத் திடீர் வேலை இழப்பு நடவடிக்கை ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மெட்டா நிறுவனம் சுமார் 145 பில்லியன் டாலர்களை ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் அதன் மேம்பாட்டிற்காக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதே இந்த பணிநீக்கத்திற்குக் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

அதாவது, மனித உழைப்பிற்கான ஊதியத்தைக் குறைத்து, அந்தப் பணத்தை ஏஐ தொழில்நுட்ப இயந்திரங்களுக்காக முதலீடு செய்ய நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதே நேரத்தில், சுமார் 7,000 ஊழியர்கள் புதிய ஏஐ சார்ந்த குழுக்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனால் அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் வாஷிங்டன் ஆகிய மாநிலங்களில் உள்ள ஊழியர்களே இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மெட்டா நிறுவனத்தின் இந்த ஏஐ நோக்கிய மாற்றம், வரும் காலங்களில் ஒட்டுமொத்த தொழில்நுட்பத் துறையிலும் வேலைவாய்ப்பு முறையை மாற்றியமைக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.