திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி கீழ நடுத்தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் மணிகண்டன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று காலை மோட்டார் சைக்கிளில் மணிகண்டன் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவர் அவரை வழிமறித்து கத்தியால் குத்தினார். இதனால் படுகாயமடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அதன் பிறகு மணிகண்டன் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மணிகண்டனை கத்தியால் குத்திய மாயாண்டி என்பவரை கைது செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.