வேலூர் மாவட்டத்தில் வனப்பகுதியை ஓட்டி துருவம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கு வீடு கட்டி தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி வளர்மதி என்ற மனைவியும் 5 மகள்களும் இருக்கும் நிலையில் 4 மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில் கடைசி மகள் அஞ்சலி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இவர் பிகாம் முடித்துள்ள நிலையில் வயது 24 ஆகிறது. இவர் நேற்று வீட்டிற்கு வெளியே இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த ஒரு சிறுத்தை அவரைக் கடித்துக் குதறியது. அந்த சிறுத்தை கொடூரமான முறையில் தாக்கியதில் அஞ்சலி உயிரிழந்து விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் சிறுத்தை தப்பி ஓடிவிட்டது. இதைப் பார்த்த வாலிபர் ஒருவர் பொதுமக்களை அழைத்து வந்த நிலையில் அவர்கள் வந்து பார்த்தபோது இடது கை துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் அஞ்சலி பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக தகவல் அறிந்தவுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து அஞ்சலி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக விசாரணை செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
