
ஒரத்தநாடு அருகே அய்யம் பட்டி அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பறையில் பேசியதால் 1 மாணவி உள்பட 5 மாணவர்களின் வாயில் செல்லோ டேப் ஒட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்ததையடுத்து கல்வித்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 21ம் தேதி நடந்த இந்த சம்பவம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சம்பவம் நடந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு ஆசிரியர், மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டியிருந்ததை புகைப்படமாக எடுத்து, அதை மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியர் புனிதாவிடம் நேரில் சென்று கேட்டுள்ளனர். “வகுப்பறையில் பேசியதால் அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது” என்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு, பள்ளி தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.