அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து படுகொலைகள் அதிகரித்துவிட்டதாக கூறியுள்ளார். அதன்படி கடந்த 200 நாட்களாக தமிழ்நாடு கொலை களமாக மாறி உள்ளது. குறிப்பாக இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 80 படுகொலைகளும், பிப்ரவரி மாதம் 64 கொலைகளும், மார்ச் மாதத்தில் 54 கொலைகளும், ஏப்ரல் மாதத்தில் 76 கொலைகளும், மே மாதத்தில் 130 கொலைகளும், ஜூனில் 14 கொலைகளும், ஜூலை 17ஆம் தேதி வரை சுமார் 88 கொலைகளும் நடந்துள்ளது.
இதை மொத்தமாக பார்க்கும்போது 200 நாட்களில் கிட்டத்தட்ட 595 படுகொலைகள் அரங்கேறியுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 86 கொலைகள் நடந்து தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் 35 கொலைகள் நடந்த தூத்துக்குடி மாவட்டமும், 31 கொலைகள் உடன் விருதுநகர் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது என்று செய்திகளில் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திமுக அரசு காவல்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டு அவர்களை பணி செய்யவிடாமல் தடுக்கிறார்கள். இன்றைய ஆட்சியாளர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்துகிறார்கள் என்று கடுமையாக திமுக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
