சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் (35) ஆவார். இவருடைய மனைவி மெர்லினா (32). இந்த தம்பதியினர் திருவான்மியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர், தனது வீட்டில் வேலை செய்யும் பெண்ணை துன்புறுத்தியதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. அதன்படி காவல்துறையினர் தம்பதியினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இதனால் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த ஆன்டோ மெர்லினா தம்பதியை கடந்த ஜனவரி மாதம் காவல்துறையினர் கைது செய்தனர். பின், ஐகோர்ட்டு உத்தரவின் படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில், சென்னை முதன்மை கோட்டில் ஆன்டோ மற்றும் மெர்லினா ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து குற்ற பத்திரிக்கை நகலை வாங்க இருவரையும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி நீதிபதி முன்னிலையில் ஆன்டோ, மெர்லினா தம்பதி ஆஜர் ஆகினர். இதையடுத்து குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை வருகிற 22-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
