கடலூரில் பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை குரங்கு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் அருகே விஜய் சங்கீதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் உறவினர்கள் குழந்தையை தொட்டில் கட்டி தூங்க வைத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக குரங்கு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையின் இடுப்பில் கடித்தது.

குரங்கு கடித்து குதறியதால் குழந்தை படுகாயமடைந்தது. உடனே பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். குழந்தையின் இடுப்பில் 14 தையல்கள் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். இதற்கு முன்பு குரங்குகள் மூன்று பேரை கடித்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.