புதிய ரேஷன் கார்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை விண்ணப்பித்தவர்களில் 98.23 சதவீதத்தினருக்குப் புதிய ரேஷன் கார்டுகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளன. திமுக அரசு பொறுப்பேற்ற இந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 20.56 லட்சம் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

​தற்போது நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்துப் பேசிய உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, சுமார் 1.07 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், அவற்றில் தகுதியான 55,000 விண்ணப்பங்களுக்கு இந்த டிசம்பர் மாத இறுதிக்குள் புதிய கார்டுகள் வழங்கப்பட்டுவிடும் என்றும் உறுதி அளித்துள்ளார். கள ஆய்வு மற்றும் தரவு சரிபார்ப்பு போன்ற நிர்வாகக் காரணங்களால் மட்டுமே சிறிய தாமதம் ஏற்பட்டதே தவிர, மற்றபடி தகுதியுள்ள யாருக்கும் ரேஷன் கார்டு மறுக்கப்படவில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.