மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கின்றார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, வேலூர் மாவட்டத்தில் பச்சிளம் குழந்தை முதல் 18 வயது வரையிலான மாற்று திறன் உடையவர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் இரண்டில் தேர்வு செய்யப்பட்ட 52 கிராமங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், உபகரணங்கள், அடையாள அட்டை பதிவு, மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக் கடன், அரசு உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட இருக்கின்றது. அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஊராட்சி ஒன்றியம் வாரியாக முகாம் நடைபெற இருக்கின்றது.

பிப்ரவரி 1-ம் தேதி வேலூர் ஊராட்சியிலும் பிப்ரவரி இரண்டாம் தேதி குடியாத்தம் ஊராட்சியியலும் பிப்ரவரி மூன்றாம் தேதியில் பேரணாம்பட்டு ஊராட்சியிலும் நான்காம் தேதி கே.வி குப்பம் ஊராட்சியிலும் நடைபெறுகின்றது. எட்டாம் தேதி காட்பாடி ஊராட்சியிலும் பத்தாம் தேதி கணியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பதினொன்றாம் தேதி  சிறுக்காஞ்சி ஊராட்சியிலும் 11ஆம் தேதி தொரப்பாடி ஊராட்சியிலும் 15ஆம் தேதி அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.