விழுப்புரத்தில் கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி சாலையில் இருக்கும் பிரம்மதேசம் கிராமத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த பழமை வாய்ந்த சிவாலயங்கள் அமைந்திருக்கின்றது. இங்கு வரலாற்று ஆய்வாளர் செங்குட்டவன் நேற்று கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது கிபி 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மூத்த தேவி சிற்பம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பற்றி அவர் கூறியுள்ளதாவது, மந்தை வெளி பகுதியில் கள ஆய்வு செய்தபோது முக்கால்வாசி அளவிற்கு மண்ணில் சிலை ஒன்று புதைந்து கிடந்தது. இதனை அந்த பகுதி மக்கள் துர்க்கை என வணங்கி வந்தார்கள். ஆனால் அது மூத்த தேவி சிற்பம் என கண்டறியப்பட்டது. காக்கை கொடியுடன் மகன் மாந்தன், மகள் மாந்தியுடனும் வலது காலை தொங்க விட்டும் இடது காலை மடக்கியும் அமர்ந்த நிலையில் மூத்ததேவி அழகாக அருள்புரிவார்.

வழக்கமாக காணப்படும் மூத்ததேவி சிற்பங்களில் காணப்படும் பெருத்த வயிறு அகற்றிய கால்கள் இங்கே காணப்படவில்லை. இந்த சிற்பத்தின் காலம் கிபி 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டு என்பதை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் உறுதி செய்து இருக்கின்றார்.

மூத்ததேவி என்பதை வடமொழியில் ஜேஷ்டா என அழைப்பார்கள். மூத்ததேவி வழிபாடு தமிழகத்தில் மிகவும் தொன்மையானதாகும். தற்போது கண்டறியப்பட்ட இந்தச் சிற்பம் பிரம்மதேசம் வரலாற்றுக்கு புதியவையாகும். ஆகையால் இந்த சிற்பத்தை உரிய முறையில் பாதுக்காக்க வேண்டும் என அவர் தெரிவித்திருக்கின்றார்.