உலகின் வயதான நபராக அறியப்பட்டு வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கன்னியாஸ்திரி லூசில் ராண்டன் வயது முதிர்வு காரணமாக 118 வது வயதில் மரணம் அடைந்தார். லூசில் ராண்டன் 1904ஆம் ஆண்டு பிப்ரவரி பதினொன்றாம் தேதி பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் பிறந்தார். பின்னாளில் கன்னியாஸ்திரி ஆன அவரை சிஸ்டர் ஆண்ட்ரே என்று அழைத்து வந்தனர். தன் வாழ்நாளில் லூசில் இரண்டு உலக போர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. முதல் உலகப் போரின் போது பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொண்ட லூசில் அவற்றை எல்லாம் சமாளித்து உயிர் தப்பினார்.
1944 ஆம் ஆண்டு இரண்டாம் உலக போரின் போது கன்னியாஸ்திரி ஆனார். இரு உலகப்போர் மட்டுமல்ல இரு பெரும் தொற்றுகளையும் சந்தித்தவர் லூசில். 1918 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சலுக்கு ஆளான அவர் அதிலிருந்து மீண்டு தன் ஆயுளை காப்பாற்றிக் கொண்டார். மேலும் கொரோனாவில் உயிர் பிழைத்த உலகில் வயதான பெண்மணி என்ற சாதனையையும் அவர் படைத்தார். இந்நிலையில் அவரது உயிர் தூக்கத்திலேயே பிரிந்துள்ளது. லூசில் மறைவிற்கு பிரான்ஸ் மக்கள் இரங்கல் செய்திகளை பதிவு செய்து வருகின்றனர்