தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விருதாச்சலம் தொகுதியில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒரு திக் திக் வெற்றி பெற்றுள்ளார். சுமார் 66,000-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற பிரேமலதா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் எஸ். விஜய்யை வெறும் 918 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலிருந்தே பிரேமலதா மற்றும் தவெக வேட்பாளர் விஜய் இடையே கடும் இழுபறி நீடித்தது. ஒரு கட்டத்தில் தவெக வேட்பாளர் முன்னிலை பெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பிரேமலதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாமக வேட்பாளர் தமிழரசி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். 2006-ல் விஜயகாந்த் அவர்கள் இதே தொகுதியில் முதல் வெற்றியைப் பதிவு செய்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மனைவி அதே தொகுதியை மீட்டெடுத்திருப்பது தேமுதிக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
