மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணிகளின் போது சுமார் 90 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், இதில் 60 லட்சம் பேர் இந்துக்கள் மற்றும் 30 லட்சம் பேர் முஸ்லிம்கள் என்று சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கையின் போது ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்ட மம்தா, “பெங்காலி மொழியில் பேசுவதால் நாங்கள் இந்தியர்கள் இல்லையா? எங்களது குடியுரிமையை நாங்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டுமா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் துணையோடு பாரதிய ஜனதா கட்சி தனது வேட்புமனுவைத் தள்ளுபடி செய்ய முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி பகிரங்கமாகச் சாடினார். பவானிபூர் தொகுதியில் தனது வேட்புமனுவை ரத்து செய்யும் நோக்கில் பா.ஜ.க.வினர் இரண்டு பொய் வழக்குகளைத் தொடர முயன்றதாகவும், ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களின் விழிப்புணர்வால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மொழி மற்றும் அடையாளத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்துப் பார்ப்பதாக மத்திய அரசு மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்த மம்தாவின் இந்தப் பேச்சு, தற்போது தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
