தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில நிர்வாகி ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) இந்தத் தேர்தலில் முதல்முறையாகக் களம் காண்கிறது. இதற்கிடையே, சி.பி.ஐ. விசாரணைக்காக டெல்லி சென்ற விஜய், அங்கு பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களைச் சந்தித்துக் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் பரவின.
இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னையில் உள்ள கொளத்தூரில் நேற்று நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, “தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை. எங்கள் தலைவர் விஜய்க்குப் பல கவர்ச்சிகரமான ‘ஆஃபர்கள்’ கொடுக்கப்பட்டன. 90 தொகுதிகள் தருவதாகப் பேரம் பேசினார்கள். ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்ளலாம் எனத் தூது அனுப்பினார்கள்.
ஆனால் பதவிக்காகவோ அல்லது அதிகாரத்திற்காகவோ ஒருபோதும் டெல்லிக்குத் தலைவணங்கி அடிபணிய மாட்டோம். அனைத்து ஆஃபர்களையும் தலைவர் விஜய் துணிச்சலுடன் நிராகரித்துவிட்டார் என்றார். மேலும் கூட்டணி தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளைத் தொண்டர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று த.வெ.க. நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். விஜய்யின் இந்தத் ‘தனி வழி’ முடிவு, தமிழகத் தேர்தல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
