தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோர் இனி கூடுதல் சுமையைச் சுமக்க நேரிடும். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அனுமதி அளித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிகளின்படி, பராமரிப்புச் செலவு மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் 5 சதவீத கட்டண உயர்வைச் செய்துகொள்ளச் சுங்கச்சாவடிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நடப்பு ஆண்டில் ஏப்ரல் 1 முதல் புதிய கட்டண விகிதம் அமலுக்கு வருகிறது. இந்த உயர்வின் மூலம் வாகனங்களின் வகையைப் பொறுத்து குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.25 வரை கட்டணம் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2024-2025 நிதியாண்டில் மட்டும் தமிழகத்தில் உள்ள 77 சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.4,300 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள முக்கியச் சுங்கச்சாவடிகளின் புதிய கட்டண பட்டியல் வருமாறு:
-
சென்னை & புறநகர்: மாத்தூர், சூரப்பட்டு, வானகரம், பரனூர், கருங்குழி (செங்கல்பட்டு), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சீபுரம்).
-
வட தமிழகம்: நல்லூர், எஸ்.வி.புரம், பட்டரைபெரும்புதூர் (திருவள்ளூர்); வாணியம்பாடி (திருப்பத்தூர்); வல்லம், பள்ளிகொண்டா (வேலூர்); சென்னசமுத்திரம், கரியமங்கலம், இனம்கரியாந்தல் (திருவண்ணாமலை).
-
மத்திய தமிழகம்: மொரட்டாண்டி, ஆத்தூர், கெங்கராம்பாளையம், சேலியமேடு, நங்கிளி கொண்டான், தென்னமாதேவி (விழுப்புரம்); கீழ்குப்பம் (கள்ளக்குறிச்சி); மணகெதி (அரியலூர்); கொத்தட்டை, பொன்னலகரம் (கடலூர்); வாழவந்தான்கோட்டை, கல்லக்குடி (திருச்சி).
-
மேற்கு தமிழகம்: நாகம்பட்டி, கரகத்தஹள்ளி, கிருஷ்ணகிரி, கதவணி (கிருஷ்ணகிரி); வேலம்பட்டி, பொங்கலூர் (திருப்பூர்); மதுக்கரை, கணியூர் (கோவை); புதுப்பட்டி (தர்மபுரி).
-
தென் தமிழகம்: சிட்டம்பட்டி, எலியார்பத்தி, கப்பலூர் (மதுரை); சத்திரபட்டி, புதூர் (திண்டுக்கல்); எட்டூர்வட்டம் (விருதுநகர்); சாலைபுதூர், புதூர்பாண்டியபுரம் (தூத்துக்குடி); நான்குநேரி, வாகைக்குளம் (திருநெல்வேலி); திருப்பதிசாரம் (கன்னியாகுமரி); உப்பார்பட்டி (தேனி).
-
டெல்டா & இதர மாவட்டங்கள்: பூதக்குடி, லெட்சுமணப்பட்டி, லெம்பாலக்குடி, பழைய கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை); கோடிகோட்டை, செண்பகம்பேட்டை, திருபாச்சேத்தி (சிவகங்கை); வெண்ணாத்தூர், போகலூர் (ராமநாதபுரம்); கோவில்வேணி (திருவாரூர்); வேம்புகுடி, மாணம்பாடி (தஞ்சாவூர்).
மேலும் இந்தக் கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவு அதிகரித்து, விலைவாசி உயரும் என்ற அச்சம் லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
