நடிகர் ரஜினிகாந்த் குறித்துத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துக்கு, அக்கட்சியின் மற்றொரு நிர்வாகியே மேடையிலேயே எதிர்ப்புத் தெரிவித்துக் கேள்வி எழுப்பியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, “தி.மு.க.வின் மிரட்டல் காரணமாகவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்து ரஜினி ரசிகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், வழக்கமான தனது பாணியில், “காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்று மிகச் சுருக்கமாகவும், அழுத்தமாகவும் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்தச் சூழலில், நேற்று சென்னையில் உள்ள கொளத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் நிர்வாகியும், தீவிர ரஜினி ரசிகருமான அசோக், மேடையிலேயே அதிரடி காட்டினார். அவர் பேசியதாவது, “ரஜினிகாந்த் பற்றி த.வெ.க.வில் யார் எது பேசினாலும், முதல் ஆளாக நான் கேள்வி கேட்பேன். ரஜினியைப் பற்றி நீங்கள் பேசியது குறித்து இந்த மேடையிலேயே விளக்கம் அளிக்க வேண்டும். நான் இன்று ஒரு நல்ல நிலையில், நேர்மையாக இருக்கிறேன் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் ரஜினிகாந்த் தான் என்றார்.
இவ்வாறு அவர் ஆவேசமாகப் பேசியது கூட்டத்தில் இருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கட்சியின் மேடையிலேயே, அக்கட்சியின் மூத்த நிர்வாகியின் கருத்துக்கு எதிராக மற்றொரு நிர்வாகி போர்க்கொடி தூக்கியது த.வெ.க. தொண்டர்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது. மேலும் இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திடம் தான் பேசிய கருத்துக்காக ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
