நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் தடை விதித்துள்ள நிலையில், தணிக்கை முறையே இன்றைய காலத்திற்குத் தேவையற்றது என்று பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
சமீபகாலமாகத் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்கள் தணிக்கை சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும், சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம் பல வெட்டுகளுக்குப் பிறகு அனுமதி பெற்றுள்ளதும் இந்தியத் திரைத்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராம் கோபால் வர்மா, தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
“இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தணிக்கை வாரியம் என்பது ஒரு முட்டாள்தனமான நடைமுறை. அது காலாவதியாகி நீண்ட காலம் ஆகிவிட்டது. ஒரு சிறுவன் தனது அலைபேசி வாயிலாகப் பயங்கரவாதச் செயல்கள் முதல் ஆபாசமான விஷயங்கள் வரை அனைத்தையும் பார்க்கும் சூழல் இன்று நிலவுகிறது. சமூக வலைதளங்களில் நாகரிகமற்ற பேச்சுகள் தடையின்றிப் பரவி வருகின்றன.”
சினிமா என்பது ஒரு வலிமையான ஊடகம் என்ற பழைய வாதத்தைச் சுட்டிக்காட்டிய அவர், சினிமாவை விட சமூக ஊடகங்களே இன்று மக்களிடையே அதிக வீச்சைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். “திரைப்படத்தில் ஒரு வார்த்தையை நீக்குவதாலோ அல்லது சிகரெட் பிடிக்கும் காட்சியை மறைப்பதாலோ சமுதாயத்தைப் பாதுகாத்துவிடலாம் என்று தணிக்கை வாரியம் நினைப்பது நகைச்சுவையானது” என அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், தணிக்கை வாரியம் பார்வையாளர்களை அவமதிப்பதாகக் கூறிய வர்மா, “நாட்டை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் அறிவுள்ள மக்களுக்கு, எதைப் பார்க்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் திறன் இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
CENSOR BOARD is OUTDATED
Not in the context of just @Actor_Vijay ‘s #JanaNayagan ‘s censor issues but in an overall manner, it is truly foolish to think that the censor board is still relevant today
It has long outlived it’s purpose, but it’s being kept alive out of laziness…
— Ram Gopal Varma (@RGVzoomin) January 9, 2026
தணிக்கை வாரியத்தின் தற்போதைய செயல்பாடுகள் வெறும் அதிகாரச் சடங்கு என்றும், தார்மீகப் பொறுப்பு என்ற பெயரில் நடக்கும் இந்தப் பாசாங்குத்தனம் ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
திரைப்படத்தைப் பார்ப்பதற்கான வயதை நிர்ணயிப்பதும், அதன் உள்ளடக்கம் குறித்து முன்கூட்டியே எச்சரிப்பதும் மட்டுமே தர்க்கரீதியானது. அதைவிடுத்து காட்சிகளை வெட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே, தனிப்பட்ட ஒவ்வொரு படத்திற்கும் பிரச்சினை வரும்போது மட்டும் குரல் கொடுக்காமல், தணிக்கை முறை என்ற அந்த அடிப்படைச் சிந்தனைக்கே எதிராகத் திரைத்துறையினர் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று ராம் கோபால் வர்மா வலியுறுத்தியுள்ளார்.
