விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்க மறுப்பதற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், தணிக்கைக் குழுவில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் சான்றிதழ் வழங்கலாம் எனக் கூறியும், ஒருவரின் புகாரால் நீதிமன்றம் வரை சென்றிருப்பது சினிமா துறையையே பாதிக்கும் என வேதனை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் விஜய்க்கு நெருக்கடி கொடுத்து அவரைத் தன் பக்கம் வளைக்க முயல்கிறதோ என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார். மத்திய அரசின் இத்தகைய அநீதிக்கு எதிராக மற்ற அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட கதாநாயகன் விஜய் மட்டும் இன்னும் மவுனமாக இருப்பது ஏன் என்று சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்துரிமைக்கு எதிரான இந்தச் செயலைக் கண்டிக்காமல் விஜய் அமைதியாக இருப்பது, பின்விளைவுகளுக்கு அஞ்சி அவர் வாய் திறக்க மறுக்கிறாரா என்ற சந்தேகத்தை உருவாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சர்ச்சை அரசியல் வட்டாரத்திலும் திரைத்துறையிலும் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
