கொலம்பியாவில் 82 வயது மூதாட்டியின் வயிற்றில் 40 ஆண்டுகால ‘கல் குழந்தை’ இருந்த சம்பவம் மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கொலம்பியா நாட்டின் தலைநகர் பொகோட்டாவில் வசிக்கும் 82 வயது மூதாட்டி ஒருவருக்கு, நீண்ட நாட்களாகத் தாங்க முடியாத வயிற்று வலி இருந்துள்ளது.

சாதாரண வாயுத் தொல்லை என்று நினைத்த குடும்பத்தினர், வலி அதிகமானதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் ஏதோ கட்டி (Tumor) இருப்பதாகக் கருதி எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் செய்து பார்த்தனர்.

அப்போது வெளியான ரிப்போர்ட்டைக் கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்தப் பாட்டியின் வயிற்றில் இருப்பது சாதாரணக் கட்டி அல்ல, அது 40 ஆண்டுகால ஒரு கரு (Fetus). மருத்துவ மொழியில் இதனை ‘லித்தோபீடியன்’ (Lithopedion) அல்லது ‘கல் குழந்தை’ (Stone Baby) என்று அழைக்கிறார்கள்.

40 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கருவுற்றபோது, அந்தக் கரு கருப்பைக்கு வெளியே (Ectopic Pregnancy) தங்கியுள்ளது. அந்தக் கரு கலைந்தாலும், உடல் அதை வெளியேற்ற முடியாமல் போனதால், தொற்று ஏற்படாமல் இருக்க இயற்கையாகவே அதன் மீது கால்சியம் படிந்து பாறை போல மாறியுள்ளது.

40 ஆண்டுகளாக எந்த அறிகுறியும் இல்லாமல் பாட்டியின் வயிற்றுக்குள்ளேயே இருந்த இந்தக் கல் குழந்தை, இப்போதுதான் வலியை ஏற்படுத்தியுள்ளது.