சம்பாதிக்கும் பணத்தில் ஒரு ரூபாய் கூட வருமான வரியாக (Income Tax) செலுத்தத் தேவையில்லை என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், உலகில் வரி இல்லாச் சொர்க்கமாக விளங்கும் 8 நாடுகளைப் பற்றியும், அங்கு நிலவும் வரி முறைகள் பற்றியும் கீழே காணலாம்.

பொதுவாக ஒரு நாட்டின் அரசாங்கம் அந்த நாட்டு மக்களின் வருமானத்தில் ஒரு பகுதியை வரியாகப் பெற்றுதான் நிர்வாகம் செய்யும். ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), சவுதி அரேபியா, ஓமன், கத்தார் மற்றும் குவைத் போன்ற வளைகுடா நாடுகள் தங்கள் நாட்டில் பணிபுரியும் மக்களிடமிருந்து தனிநபர் வருமான வரி வசூலிப்பதில்லை.

இவை தவிர பஹாமாஸ், மொனாக்கோ, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகளிலும் வருமான வரி கிடையாது. இந்த நாடுகளில் நீங்கள் வாங்கும் சம்பளம் 100% உங்களுக்கே சொந்தம்.

வரியைக் குறைக்க எந்த முதலீடும் செய்ய வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், சில நாடுகளில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி (VAT) மற்றும் நிறுவனங்களுக்கான வரி மட்டும் வசூலிக்கப்படுகிறது.

குறிப்பாக வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனிநபர் வருமான வரி இல்லாத நாடாகத் திகழ்கிறது. இங்கு சம்பளத்திற்கு வரி இல்லை என்றாலும், நாம் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5% VAT வரி உண்டு.

இதேபோல், சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலும் ஊழியர்களின் சம்பளத்திற்கு ஒரு பைசா கூட வருமான வரியாகப் பிடிக்கப்படுவதில்லை. இதன் மூலம் அங்கு பணிபுரிபவர்கள் தங்கள் உழைப்பிற்கான பலனை 100% சேமிக்க முடிகிறது.

உலகின் மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றான கத்தாரிலும் தனிநபர் வருமான வரிக்கு இடமே இல்லை. மற்றொரு நாடான ஓமன், தற்போது வரை வரி இல்லாத நாடாகவே நீடிக்கிறது.

ஆனால், ஓமன் அரசு ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வரவுள்ளது. அதன்படி, வரும் 2028-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல், மிக அதிக வருமானம் ஈட்டும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு மட்டும் வருமான வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு இந்த நாடுகள் மிகப்பெரிய ‘டாக்ஸ் ஃப்ரீ’ சொர்க்கமாக விளங்குகின்றன.”