ஒடிசா மாநிலம் சம்பல்பூரில், வெறும் 187 ஊர்க்காவல் படை (Home Guard) பணியிடங்களுக்கு சுமார் 8,000 பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் குவிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பணிக்கான அடிப்படைத் தகுதி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி என்பதுதான் இதில் வேதனையான விஷயம். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான இளைஞர்களைச் சாதாரணப் பள்ளிகளில் அமர வைத்துத் தேர்வு நடத்துவது சாத்தியமில்லாததால், மாவட்ட நிர்வாகம் ஒரு மாற்று முடிவை எடுத்தது. அதன்படி, சம்பல்பூரில் உள்ள ஜமாதர்பாலி விமான ஓடுதளமே (Jamadarpali Airstrip) தேர்வு மையமாக மாற்றப்பட்டது.

விமானங்கள் ஏறி இறங்கும் ஓடுதளத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திறந்தவெளியில் தரையில் அமர்ந்து தேர்வு எழுதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து கூடுதல் எஸ்பி கூறுகையில், “ஒரே நேரத்தில் 8,000 பேருக்கு 20 பள்ளிகளில் ஏற்பாடு செய்வது கடினம் என்பதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் எவ்வித அசம்பாவிதமும் இன்றித் தேர்வை நடத்தவும் இந்த விமான ஓடுதளத்தைத் தேர்ந்தெடுத்தோம்” எனத் தெரிவித்தார்.

உயர்கல்வி கற்றும் முறையான வேலைவாய்ப்பு இல்லாததால், மிகக் குறைந்த ஊதியம் மற்றும் தகுதி கொண்ட பணிகளுக்குக்கூட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முண்டியடிப்பது, ஒடிசாவின் தற்போதைய சமூக நிலையைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.