மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சமையல் எரிவாயு (LPG) இறக்குமதி மற்றும் விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இத்தகைய சூழலில், விறகு பயன்பாட்டைக் குறைத்து, புகை இல்லா அடுப்பை உருவாக்கி ராஜஸ்தானைச் சேர்ந்த முகமது ஷேர் கான் என்ற கைவினைஞர் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த இவர், எட்டாம் வகுப்போடு பள்ளிக் கல்வியை நிறுத்தியவர். கடந்த 27 ஆண்டுகளாக இரும்பு வேலைப்பாடுகளில் கைதேர்ந்த கலைஞராக விளங்கும் ஷேர் கான், முறையான பொறியியல் கல்வி பயிலாவிட்டாலும், தனது அனுபவ அறிவைக் கொண்டு இந்த நவீன அடுப்பை வடிவமைத்துள்ளார்.

கிராமப்புறப் பெண்கள் விறகு அடுப்பில் சமைக்கும்போது, பருப்பு மற்றும் பாட்டி (ராஜஸ்தானி உணவு) போன்ற உணவுகளைத் தனித்தனியாகச் சமைக்க அதிக நேரம் செலவிடுவதையும், புகையினால் அவதிப்படுவதையும் ஷேர் கான் கவனித்தார். நேரத்தை மிச்சப்படுத்தி, குறைந்த விறகில் அதிக உணவைச் சமைக்கும் நோக்கில் தனது ஆராய்ச்சியைத் தொடங்கினார்.

1990-களில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, பலகட்ட சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு 2017-ஆம் ஆண்டு ‘விஸ்வகூரு சூளா’ (Vishwaguru Chulha) என்ற பெயரில் காப்புரிமை (Patent) பெற்றது. 27 ஆண்டுகால உழைப்பில் உருவான இந்த அடுப்பு, தற்போது இந்தியா முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அடுப்பில் ஒரே நேரத்தில் பல உணவுகளைச் சமைக்க முடியும். 25 நபர்களுக்கான உணவை வெறும் 30 நிமிடங்களில் தயார் செய்யலாம்.புகை வெளியேற்றம் மிகக் குறைவாக இருப்பதால், பெண்களுக்குக் கண் எரிச்சல் மற்றும் சுவாசப் பாதிப்புகள் ஏற்படாது.

 

மிகக் குறைந்த அளவு விறகு மட்டுமே தேவைப்படுவதால், சமையல் எரிவாயுவைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் குறைகிறது. இதன் விலை சுமார் ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண வீடுகள் மற்றும் சிறு உணவகங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாதாரண இரும்புத் தொழிலாளியாக இருந்து, இன்று ஒரு கண்டுபிடிப்பாளராக உயர்ந்துள்ள ஷேர் கானின் இந்த முயற்சி, இந்தியாவின் ‘தற்சார்பு’ (Self-Reliant) முயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. மேலும் தற்போது எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டின் காரணமாக அவரது கண்டுபிடிப்பு பரவலாக பேசப்படுகிறது.