திருமண ஆசை காட்டி, முன்-திருமண புகைப்படப் படப்பிடிப்பு (Pre-wedding shoot) என்ற பெயரில் இளம்பெண்ணை கொல்கத்தாவிற்கு அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அயோத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியின் மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மணமகன் வீட்டார் தரப்பில் வரதட்சணையாக தார் சொகுசு கார் மற்றும் ரூ. 25.51 லட்சம் ரொக்கம் கோரப்பட்டதாகத் தெரிகிறது. பெண்ணின் குடும்பத்தினர் இந்த கோரிக்கையை நிறைவேற்ற மறுத்ததால், அந்த இளைஞரின் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

திருமணம் நின்ற பிறகும், சம்பந்தப்பட்ட இளைஞர் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார். “நாமிருவரும் சேர்ந்து முன்-திருமண புகைப்படப் படப்பிடிப்பு நடத்தலாம்” எனக் கூறி ஆசை வார்த்தைகள் பேசி, அவரை கொல்கத்தாவிற்கு வரவழைத்துள்ளார்.

“கொல்கத்தாவிற்குச் சென்ற அந்தப் பெண்ணுக்கு, மயக்க மருந்து கலந்த பானத்தைக் கொடுத்து அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணின் உடல்நிலை கடுமையாகப் பாதிப்படைந்தது.

உடல்நலம் குன்றிய நிலையில் அயோத்தி திரும்பிய அந்த இளம்பெண், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து பெண்ணின் குடும்பத்தினர் மகாராஜ்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் அவதேஷ் பிரசாத்தைச் சந்தித்து தங்களுக்கு நீதி கிடைக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பெண்ணின் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.