மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 20 நாட்களாகக் கப்பலில் சிக்கியிருந்த இந்தியக் கப்பல் கேப்டன் ரஞ்சன் சிங் (47), முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த ராகேஷ் ரஞ்சன் சிங், கடந்த 26 ஆண்டுகளாக வணிகக் கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி ‘ஏ.எஸ்.பி. அவானா’ (ASP Awana) என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான எண்ணெய் கப்பலில் கேப்டனாகப் பணியில் சேர்ந்தார்.

கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மூண்டதால், உலகிலேயே மிக முக்கியமான கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு காரணங்களால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கேப்டன் ரஞ்சன் சிங் உட்பட 35 பணியாளர்களுடன் அந்தப் பிரம்மாண்ட கப்பல் துபாய் கடற்கரையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.

சுமார் 20 நாட்கள் நடுக்கடலில் தவித்ததாலும், போர்க்காலச் சூழலால் ஏற்பட்ட கடும் மன உளைச்சலாலும் கடந்த 18-ஆம் தேதி ரஞ்சன் சிங்கின் உடல்நிலை மோசமடைந்தது. அவரை மீட்க ‘ஏர் ஆம்புலன்ஸ்’ (Air Ambulance) வசதி கோரப்பட்டது. ஆனால், போர்ச் சூழல் காரணமாக வான்வழிப் போக்குவரத்துக்கான அனுமதியைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் படகு மூலம் கரைக்குக் கொண்டு செல்லப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

“உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தால் என் கணவரின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்” என ரஞ்சன் சிங்கின் மனைவி மற்றும் இரு மகன்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய விரும்புவதாகவும், அவரது உடலை விரைவாகத் தாயகம் கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஞ்சன் சிங்கின் நண்பரும் மூத்த கடற்படை வீரருமான கேப்டன் சஞ்சீவ் குமார் கூறுகையில், “மருத்துவச் சிகிச்சை கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமதமே இந்த உயிரிழப்புக்குக் காரணம். உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்குத் தேவையான நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை மத்திய அரசும், சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனமும் வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

தற்போது ரஞ்சன் சிங்கின் உடல் துபாயில் உள்ள ஷேக் ரஷீத் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகளை இந்தியத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது.