தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறிப் பெண்களை ஏமாற்றி வந்த போலி சாமியார் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் நெருக்கம் காட்டிய மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத் தலைவி ரூபாலி சக்கங்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அசோக் கரத் என்பவர், வணிகக் கடற்படையில் (Merchant Navy) அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனக்குத் தெய்வ சக்தி இருப்பதாகக் கூறிக்கொண்டு, ஜோதிடராக உருவெடுத்த இவர், அப்பாவி மக்களை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த நாசிக் போலீசார், கடந்த புதன்கிழமை அசோக் கரத்தைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அசோக் கரத்திடம் நடத்திய விசாரணையில் அதிர வைக்கும் உண்மைகள் வெளியாகின. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவைச் சோதனை செய்தபோது, அதில் சுமார் 58 ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். பெண்களை ஏமாற்றித் தவறாகப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களாக இவை கருதப்படுகின்றன.

குற்றவாளி அசோக் கரத்துடன் மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத் தலைவி ரூபாலி சக்கங்கர் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவின. பெண்களுக்கு நீதி வழங்க வேண்டிய உயரிய பதவியில் இருப்பவர், ஒரு பாலியல் குற்றவாளியுடன் இவ்வளவு நெருக்கமாக இருப்பது எப்படி? எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ரூபாலி சக்கங்கர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அளவில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, ரூபாலி சக்கங்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இருப்பினும், தனது ராஜினாமா கடிதத்தில் ‘தனிப்பட்ட காரணங்களுக்காக’ பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாலியல் குற்றவாளியுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டு மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.