மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பேசி பிராந்திய அமைதி குறித்து ஆலோசனை நடத்தினார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை ஈரான் இலக்கு வைத்து வருகிறது. இதனால் உலகளவில் கடும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், இந்தியாவிற்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றிய கப்பல்கள் வழியிலேயே முடங்கியுள்ளன. இதன் விளைவாக, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதுடன், பெட்ரோல், டீசல் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவிற்கான எரிபொருள் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடி நேரடியாகக் களமிறங்கியுள்ளார். ஈரான் அதிபரைத் தொடர்பு கொண்ட அவர், முதலில் அவருக்கு ‘ஈத்’ மற்றும் ‘நவ்ரோஸ்’ பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த விழாக் காலம் மேற்கு ஆசியாவில் மீண்டும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை ஏற்படுத்தும் எனத் தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த உரையாடலின் போது பிரதமர் மோடி சில முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அதன்படி,  சர்வதேச கடல் பகுதியில் சரக்குக் கப்பல்கள் எவ்விதத் தடையுமின்றி பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

போர்ச் சூழலால் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்படக் கூடாது; சரக்கு வழித்தடங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஈரானில் தங்கியுள்ள இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பிற்கு ஈரான் அரசு அளித்து வரும் ஒத்துழைப்பிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

ஈரான் உடனான இந்த பேச்சுவார்த்தைக்கு இணையாக, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்தும் எரிபொருளைக் கொள்முதல் செய்ய இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பிரதமரின் இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்தியாவுக்குத் தேவையான எண்ணெய் விநியோகத்தில் ஈரான் ஏதேனும் சலுகைகளை அறிவிக்குமா என்பதை சர்வதேச நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.