மேற்கு வங்க மாநிலம் பர்கனாஸ் மாவட்டம்பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் காஷ்மீரா ஷேக் (36). இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட சிறிய வீட்டில் கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கொல்கத்தாவில் பைகள் தயாரிக்கும் கூலி வேலை செய்து வருகிறார். காஷ்மீரா ஷேக் வீட்டிலிருந்தபடியே ஜரி எம்பிராய்டரி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், காஷ்மீரா ஷேக் குல்தாலி ஜம்தலா பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். சமீபத்தில் தான் பதிவு செய்த சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத் தொகை ரூ.300 வங்கி கணக்கில் வந்துள்ளதா என்பதை தெரிந்து கொள்வதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு தனது பாஸ்புக்கை வங்கி ஊழியரிடம் கொடுத்து கணக்கை சரிபார்க்குமாறு கேட்டுள்ளார்.
அப்போது வங்கி ஊழியர் கணக்கை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். காரணம், காஷ்மீரா ஷேக்கின் வங்கி கணக்கில் ரூ.99,99,99,997 இருப்பு தொகையாக காட்டியுள்ளது. அதாவது ரூ.100 கோடிக்கு வெறும் 3 ரூபாய் மட்டுமே குறைவாக இருந்துள்ளது. தனது கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதை பார்த்த காஷ்மீரா ஷேக்கும் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் அவர் விளக்கம் கேட்டுள்ளார்.
ஆனால், வங்கி நிர்வாகம் இதற்கு சரியான விளக்கம் அளிக்கவில்லை என்றும், கணினி தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தொகை காட்டப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காஷ்மீரா ஷேக்கின் வங்கி கணக்கு உடனடியாக முடக்கப்பட்டது. வேறு வங்கி கணக்கு இல்லாததால், குடும்பத்தின் அன்றாட செலவுகளுக்கே அவர் சிரமப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட காஷ்மீரா ஷேக், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
