பெங்களூரு சந்திரா லே அவுட் பகுதியில் வசித்து வரும் அல்தாப் பாஷா என்பவரது மனைவி பானு மர்ம நபரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முப்பத்தி நான்கு வயதான பானு கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானவர் மற்றும் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலை செய்து வந்த பானு நேற்று முன்தினம் மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது மர்ம நபர் ஒருவரால் வழிமறிக்கப்பட்டார். அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பானுவைச் சரமாரியாகக் குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த கபீஜ் என்பவர் பானுவை கத்தியால் குத்திக் கொன்றது தெரியவந்துள்ளது. கபீஜிற்கும் ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில் பானுவுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இது குறித்துப் பானுவின் குடும்பத்தினருக்குத் தெரிய வந்ததைத் தொடர்ந்து கபீஜுடனான தொடர்பைப் பானு துண்டித்துக் கொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கபீஜ் அடிக்கடி பானுவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததோடு இது தொடர்பாகப் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் கபீஜை எச்சரித்து அனுப்பி வைத்த நிலையில் இதனால் ஏற்பட்ட வன்மத்தில் பானுவை வழிமறித்து ஏழு இடங்களில் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். தலைமறைவாக இருந்த கபீஜை போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.