மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 22 நாட்களாகத் தொடர்ந்து வரும் ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு அதிரடி மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் – அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதால், மேற்கு ஆசிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் பணவீக்கம் விண்ணைத் தொட்டுள்ளது. இந்தியாவிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், வழக்கமான கடல் வழிப்பாதையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ‘பிளான் பி’ எனப்படும் மாற்றுத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
அதன்படி வழக்கமான இறக்குமதி நாடுகளைத் தவிர்த்து, ரஷ்யாவிலிருந்து அதிகப்படியான கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்ய இந்தியா இறங்கியுள்ளது. ரஷ்யாவிலிருந்து சுமார் 7.7 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு ‘அக்வா டைட்டன்’ என்ற பிரம்மாண்ட கப்பல் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது.
கடந்த மார்ச் 18-ஆம் தேதி ‘ஜக் லாட்கி’ (Jag Ladki) என்ற எண்ணெய் கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தைச் சென்றடைந்தது. கடந்த 22 நாட்களில் மட்டும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஏற்றிய நான்கு பெரிய கப்பல்களை இந்தியா கொண்டு வந்துள்ளது.
இந்தியாவிற்குத் தினசரி 55 லட்சம் பேரல் எண்ணெய் தேவைப்படுகிறது. தற்போது நிலவும் போர்ச் சூழலை எதிர்கொள்ளத் தேவையான எண்ணெய் இருப்பு இந்தியாவிடம் போதுமான அளவு உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்தாலும், மாற்று கடல் வழித்தடங்கள் மூலம் தடையின்றி எரிபொருளைக் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, எதிர்காலத்தில் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று பெட்ரோலிய அமைச்சகம் நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளது.
