2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தமிழக இளைஞர்களைக் கவரும் வகையில் ஒரு மிகப்பெரிய வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இயங்கும் அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையை உறுதி செய்யும் இந்த அறிவிப்பு, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. சமீபகாலமாகத் தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் வெளிமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அதிமுகவின் இந்த “மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை” என்ற அறிவிப்பு ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
ஹரியானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே இத்தகைய சட்டங்கள் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதிமுக இதனைத் தனது தேர்தல் அறிக்கையில் பிரதானமாகச் சேர்த்துள்ளது. வேலை தேடும் லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்களின் வாக்குகளைக் குறிவைத்து அதிமுக வீசியுள்ள இந்த அஸ்திரம், மற்ற கட்சிகளுக்கும் ஒரு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
