நாக்பூர்: ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், “பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் 75 வயதுக்கு பிறகு தங்கள் பதவியை விட்டுவிட்டு, மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்” என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நாக்பூரில் நடைபெற்ற குரு பூர்ணிமா நிகழ்ச்சியில் பேசிய அவர், “யாராவது உங்களை 75வது பிறந்த நாளில் வாழ்த்தினால், உங்கள் காலணியை தூக்கி எறிந்து ஓய்வெடுங்கள்” எனவும், “இது ஒரு புதிய தலைமுறைக்கு வழிவிடும் நேரம்” எனவும் தெரிவித்துள்ளார். இந்த கருத்து, எதிர்வரும் செப்டம்பர் 17-ம் தேதி 75வது பிறந்த நாளை கொண்டாட உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு  ஓய்வு பெற வேண்டும் என்பதை மோகன் பகவத் வலியுறுத்துவது போல் இருக்கிறது.

இந்த நிலையில், சிவசேனா (UBT) எம்.பி. சஞ்சய் ராவத், “இது பிரதமர் மோடியை விலக வைக்கும் புள்ளிவிவரம்” என கூறியுள்ளதோடு, “RSS-ன் கருத்துக்கு பாஜக தலைமை என்ன பதிலளிக்கிறது என்பது முக்கியம்” என வலியுறுத்தியுள்ளார். ஆனால் பாஜக வட்டாரங்கள் இது பற்றி பேசப்படுவது மிக விரைவான முடிவெடுப்பு எனக் கூறுகின்றன. கடந்த மூன்று நாடாளுமன்ற தேர்தல்களில் கட்சியை வெற்றிகக்கு வைத்து சென்ற பிரதமர் மோடி, பல மாநிலங்களில் ஆட்சியை நிலைநாட்டி உள்ளார். அவருக்கு உடல்நல பிரச்சனை ஏதும் இல்லாத நிலையில், ஓய்வு குறித்த கலந்துரையாடல் உண்மையில் எதைக் குறிக்கிறது என கேள்விகள் எழுந்துள்ளன.

பகவத்தின் இந்த பேச்சு மோடிக்கு எதிராக அல்ல, பொதுவான கொள்கையை நினைவூட்டியது எனவும், அவர் சொல்லவேண்டியிருந்தால் தனிப்பட்ட முறையில் தெரிவிப்பார் எனவும் பாஜக மூத்த தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும், 2025ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் நிறுவனம் 100வது ஆண்டு விழாவை கொண்டாடவிருக்கும் நிலையில், சங்கத்தின் பங்கு அரசியல் வாரிசு தேர்வில் முக்கியத்துவம் பெறும் என அரசியல் வட்டாரங்கள் மதிக்கின்றன. அதே நேரத்தில், பாஜகவின் தற்போதைய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு பதிலாக புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.

முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி போன்றோரின் பெயர்கள் பாஜக தலைமை பதவிக்குப் பரிசீலிக்கப்படுகின்றன. ஆனால் ஃபட்னாவிஸ் மாநில அரசியல் மீது தீவிரம் கொண்டிருப்பதையும், கட்கரிக்கு சில உடல்நல சிக்கல்கள் இருப்பதையும் கருத்தில் கொண்டு கட்சித் தலைமையகம் முடிவெடுக்கவிருக்கிறது.